மின் கம்பியில் உரசி லாரி தீப்பிடித்து எரிந்தது
ராயக்கோட்டை
ராயக்கோட்டை அருகே கட்டுமான பணிக்காக ஜல்லி கற்கள் கொட்டிய போது மின் கம்பியில் உரசி டிப்பர் லாரி தீப்பிடித்து எரிந்தது.
லாரியில் தீ
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள நாகமங்கலம் ஊராட்சியில் அரசு பட்டு பண்ணை அருகே டாடா நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறன்றன. இந்த கட்டுமான பணிக்காக ஒரு டிப்பர் லாரியில் ஜல்லிகற்கள் ஏற்றி வந்து வந்தனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள உச்சம்பட்டியை சேர்ந்த டிரைவர் செந்தில் லாரியை ஓட்டி வந்தார்.
கட்டுமான பணி நடைபெற்ற இடத்தில் லாரியில் இருந்து ஜல்லியை கொட்டிய போது டிப்பர் லாரி மேேல சென்ற மின்சார கம்பியில் உரசியது. இதில் டிப்பர் லாரி திடீரென தீப்பிடித்து கொண்டது. இதனால் டிரைவர் செந்தில் கீழே குதித்து உயிர் தப்பினார். லாரியின் டீசல் டேங்க் மற்றும் டயர்கள் தீப்பிடித்து மளமளவென எரிந்தது.
விசாரணை
இதுகுறித்து ராயக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் அணில்குமார் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் டிப்பர் லாரி தீயில் எரிந்து சேதமானது. இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.