மோட்டார்சைக்கிள்மீது லாரி மோதியது பிளஸ்-1 மாணவர் உடல் நசுங்கி சாவு


மோட்டார்சைக்கிள்மீது லாரி மோதியது  பிளஸ்-1 மாணவர் உடல் நசுங்கி சாவு
x

பிளஸ்-1 மாணவர் உடல் நசுங்கி சாவு

ஈரோடு

சிவகிரி அருகே மோட்டார்சைக்கிள்மீது லாரிமோதியதில் பிளஸ்-1 மாணவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

பிளஸ்-1 மாணவர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மருதாச்சலம். இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் சிவகிரி லால்பகதூர் தெருவில் குடும்பத்துடன் குடியிருந்து வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள். இதில் மூத்த மகன் கிரண் (வயது 16). இவர் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் கிரணின் தம்பி நேற்று காலை 7.30 மணி அளவில் அம்மன் கோவில் என்ற இடத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து தம்பியை வீட்டிற்கு அழைத்து வர மோட்டார்சைக்கிளில் கிரண் சென்று கொண்டு இருந்தார்.

உடல் நசுங்கி சாவு

சந்தைமேடு என்ற இடத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோட்டார்சைக்கிள்மீது மோதியது. அப்போது தூக்கி வீசப்பட்ட கிரண் பின்னால் வந்த வேன்மீது மோதி கீழே விழுந்தார். அப்போது லாரியின் சக்கரம் கிரண் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கதறல்

இதுகுறித்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜீவானந்தம் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்.

இறந்த கிரணின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.


Next Story