வீட்டுக்குள் புகுந்த லாரி
வந்தவாசி அருகே வீட்டுக்குள் லாரி புகுந்தது. மேலும் 7 வாகனங்கள் சேதமடைந்தன.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தில் வந்தவாசி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள கூட்ரோட்டில் மேல்மலையனூரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி தனியார் பால் கம்பெனிக்கு பால் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி வந்தது.
இந்த லாரி எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது மோதி நிலைதடுமாறி மெக்கானிக்கடைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 7 இருசக்கர வாகனங்கள் மீது ஏறியது. இதில் வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் அருகில் உள்ள வீட்டிற்குள் பால் லாரி புகுந்தது.
இதில் மதுரை மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் குப்புசாமி (வயது 45) என்பவர் லேசான காயத்துடன் உயிர்த்தப்பினார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வடவணக்கம்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று டிரைவர் குப்புசாமியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.