பழக்கடைக்குள் லாரி புகுந்து விபத்து: படுகாயமடைந்த கடை உரிமையாளர் சாவு
பழக்கடைக்குள் லாரி புகுந்த விபத்தில் படுகாயமடைந்த கடை உரிமையாளர் உயிாிழந்தாா்.
திண்டிவனம்,
திண்டிவனம் கிடங்கல்-1பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் மகன் நரேஷ்குமார் (வயது 26). இவர் சந்தைமேட்டில் திண்டிவனம்-செஞ்சி ரோட்டில் சாலையோரம் பழக்கடை வைத்திருந்தார். கடந்த 2-ந்தேதி, இவர் கடையில் இருந்தார்.
அப்போது, அந்த வழியாக திண்டிவனத்தில் இருந்து செஞ்சி மார்க்கமாக சென்ற லாரியும், எதிரே திண்டிவனம் நோக்கி வந்தமற்றொரு லாரியும் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன்ஒன்று உரசியது.
இதில், செஞ்சி நோக்கி சென்ற லாரி, அங்குள்ள மின்கம்பத்தின் மீது மோதி, பழக்கடைக்குள் புகுந்தது. இதில், நரேஷ்குமார், அங்கு பழம் வாங்கி கொண்டிருந்த கொங்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பாலசுப்பிரமணியம் (வயது 48) ஆகியோர் மீது மோதி நின்றது.
இதில் நரேஷகுமார், பாலசுப்பிரமணியம் மற்றும் லாரியை ஓட்டி வந்த பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் விஜயகுமார் (40) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விஜயகுமாரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நரேஷ் குமாரும், காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு பாலசுப்பிரமணியமும் கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் நரேஷ் குமார் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.