சிமெண்டு லாரி-டேங்கர் லாரி மோதி கவிழ்ந்தன


சிமெண்டு லாரி-டேங்கர் லாரி மோதி கவிழ்ந்தன
x

தொப்பூர் கணவாயில் சிமெண்டு லாரி, டேங்கர் லாரிகள் மோதி கவிழ்ந்தன. இந்த விபத்தில் டிரைவர்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

தொப்பூர் கணவாயில் சிமெண்டு லாரி, டேங்கர் லாரிகள் மோதி கவிழ்ந்தன. இந்த விபத்தில் டிரைவர்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

லாரிகள் மோதல்

ஆந்திரா மாநிலத்தில் இருந்து சிமெண்டு கல் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு புறப்பட்டது. இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று காலை வந்து கொண்டு இருந்தது. லாரியை சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது37) என்பவர் ஓட்டி வந்தார். தொப்பூர் இரட்டை பாலம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் சாலையோரம் உள்ள 10 அடி ஆழ பள்ளத்தில் 2 லாரிகளும் கவிழ்ந்தன. இதில் டிரைவர் சுரேஷ்குமார் (37), டேங்கர் லாரி டிரைவர்கள் சிவராஜ் (55), சரவணக்குமார் (31) மற்றும் லாரியில் வந்த சந்திரமோகன் (41), ஆனந்தகுமார் ஆகிய 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டேங்கரில் இருந்து டீசல் வனப்பகுதியில் ஆறாக ஓடி வீணானது. டேங்கர் லாரியின் மூடியை போலீசார் சரி செய்தனர்.

பின்னர் 2 லாரிகளையும் கிரேன் மூலம் மீட்டு அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story