ஜனநாயக மரபுகளை நிலை நிறுத்தியவர் இரா.செழியன்-வி.ஐ.டி.யில் நடந்த விழாவில் பழ.நெடுமாறன் பேச்சு
நாடாளுமன்றத்தில் ஜனநாயக மரபுகளை நிலை நிறுத்தியவர் இரா.செழியன் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் பேசினார்.
காட்பாடி
நாடாளுமன்றத்தில் ஜனநாயக மரபுகளை நிலை நிறுத்தியவர் இரா.செழியன் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் பேசினார்.
நூற்றாண்டு விழா
வி.ஐ.டி பல்கலைக்கழகம், நாவலர் -செழியன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து முன்னாள் எம்.பி. இரா.செழியன் நூற்றாண்டு விழாவை வி.ஐ.டி. பல்கலைகழகத்தில் நேற்று நடத்தின. விழாவிற்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகையில், ''வி.ஐ.டி பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டியவர் நாவலர் நெடுஞ்செழியன். இப்போது வி.ஐ.டி.வேலூர், சென்னை, அமராவதி, போபால் ஆகிய 4 மையங்களிலும் 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த புகழ் அனைத்தும் எம்.ஜி.ஆரைத் தான் சேரும்.
நேர்மையை கடைப்பிடித்தவர்
2011-ம் ஆண்டு வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இரா. செழியனுக்கு கவுரவ பேராசிரியர் பணிக்கான ஆணையை வழங்கினேன். அதில் இருந்து அவர் தனது இறுதி காலம் வரை வி.ஐ.டி.யில் தான் இருந்தார். தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையை கடைபிடித்தவர். அவரைக் கண்டால் மத்திய அரசு பயப்படும்.
அவருடைய வாதத்திறமை மத்திய மந்திரிகள், சபாநாயகர் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
நாடாளுமன்ற மரபுகளை நிலை நிறுத்தியவர்
நாவலர் நெடுஞ்செழியனுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இப்போது அவருடைய இளவல் இரா. செழியனுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இருவரும் ஜனநாயக மரபுகளை நிலை நிறுத்துவதில் சிறப்பானவர்கள். நாவலர் நெடுஞ்செழியன் சட்டமன்றத்தில் ஜனநாயக மரபுகளை நிலை நிறுத்தினார். அவை முன்னவராக திகழ்ந்தவர். சட்டசபை மரபுகளை காத்தவர். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். இரா. செழியன் நாடாளுமன்ற மரபுகளை நிலை நிறுத்தியவர்.
ஷா கமிஷன் அறிக்கையை...
நாட்டு மக்களுக்கு அளப்பரிய பணிகளை செய்தவர் அவர். அவரை ஆளுங்கட்சியினர் மட்டுமல்ல எதிர்க்கட்சியினரும் போற்றும் வகையில் அவருடைய பணி இருந்தது. நாடாளுமன்றத்தில் ஜனநாயக மரபுகளை நிலை நிறுத்தியவர். மக்களுக்காக கடைசி வரை தொண்டாற்றியவர். ஷா கமிஷன் அறிக்கையை இந்திய மக்களுக்கு வழங்கியவர். அதற்காக பல இன்னல்களை சந்தித்தவர்.
இளைஞர்கள் மாணவ, மாணவிகள் செழியன் வரலாற்றை முழுமையாக படிக்க வேண்டும்.
இவர் அவர் பேசினார்.
நூல் வெளியீட்டு விழா
விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா, முன்னாள் எம்.பி. டி.கே.ரங்கராஜன், முன்னாள் அமைச்சர்கள் எச்.வி. ஹண்டே, சி. பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், தினமணி நாளிதழ் ஆசிரியர் கி. வைத்தியநாதன், நீலா குழந்தைவேலு, விமலா சுப்பையா, அமெரிக்க டாக்டர்கள் ஜானகிராமன், சம்பந்தம் ஆகியோர் பேசினர். அரங்க சுப்ரமணியம் தமிழில் மொழிபெயர்த்த இரா.செழியனின் 'மக்களுக்கான நாடாளுமன்றம்' என்ற நூலை வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட்டார். அதனை முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே பெற்றுக்கொண்டார்.
முன்னதாக பூங்குழலி ராமதாஸ் வரவேற்றார். முடிவில் டாக்டர் கல்யாணி மதிவாணன் நன்றி கூறினார்.