தரிசாக கிடக்கும் இடத்தை குத்தகைக்கு விட வேண்டும்


தரிசாக கிடக்கும் இடத்தை குத்தகைக்கு விட வேண்டும்
x
தினத்தந்தி 22 Sept 2023 12:15 AM IST (Updated: 22 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் தரிசாக கிடக்கும் இடத்தை விவசாய சங்கத்துக்கு குத்தகைக்கு விட வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் தரிசாக கிடக்கும் இடத்தை விவசாய சங்கத்துக்கு குத்தகைக்கு விட வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.

கூட்டத்தில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் ஜோதிபாசு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலாஜான், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) வாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா, செண்பகசேகரபிள்ளை, தாணுப்பிள்ளை, விஜி, முருகேசபிள்ளை, அருள், தங்கப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், விவசாயிகள் குறைகளையும், கோரிக்கைகளையும் வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

விதை நெல் தட்டுப்பாடு

தோவாளை தாலுகா திட்டுவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் மேற்கூரை வசதி இல்லாத காரணத்தால் விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாக வேண்டியது உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக வங்கி வளாகத்தில் மேற்கூரை அமைத்து தர வேண்டும். கடந்த மழை காலத்தில் டெல்டா மாவட்டத்தில் ஈரப்பதத்தில் தளர்வுகள் பெற்று 22 சதவீதம் வரை ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்தது போன்று நமது மாவட்டத்திலும் கன்னிப்பூ அறுவடை நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

குமரி மாவட்டம் முழுவதும் தற்போது கும்பப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். சுசீந்திரம், பறக்கை உள்பட பல்வேறு பகுதிகளில் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் பல இடங்களில் விதைநெல் தட்டுப்பாடு உள்ளது. உழவர் செயலி மூலம் தகவலை தெரிந்து கொள்ளலாம் என்றால் விதை நெல் இருப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான விதை நெல்லை தங்குதடையின்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பொன்மணி, திருப்பதிசாரம்-3 ரக நெல்லை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

நஷ்டம் ஏன்?

திருப்பதிசாரம் விதைப்பண்ணையில் தரிசாக விடப்பட்ட நிலத்தை நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கு குத்தகைக்கு விட வேண்டும். அதன்மூலம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். வேளாண்மை சார்ந்த பல்வேறு துறைகளின் பணிகள், திட்டங்கள் குறித்து விளக்க வேண்டும். தென்னை மதிப்புக்கூட்டு மையம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவது ஏன்? நெய்யூர் ரெயில்வே பாலத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டு இருப்பது ஏன்? குளங்களை தூர்வாருவதற்கான கோப்புகள் கனிமவளத்துறை ஊழியர்களால் முடங்குவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.வி.எம். கால்வாய் புனரமைப்பு பணி தொடங்கும் வரை கரை ஓரமுள்ள மரங்களை அனுபவ ஏலத்துக்கு விட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்து பேசுகையில் கூறியதாவது:-

3 டன் விதை நெல்

விவசாயிகள் குறிப்பிட்ட ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் 80 டன் நெல் விதை இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி விதை நெல் வழங்கப்படும். குமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடியை 5,845 எக்டேரில் மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு சார்பில் 1505 எக்டேருக்கு விதை நெல் தயார் செய்து வழங்க வேண்டும். இதற்கு 80 டன் நெல் தேவைப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு 92.96 டன் விதை நெல் தயாரித்து சப்ளை செய்யப்பட்டுள்ளது.

திருப்பதிசாரத்தில் 3 டன் விதை நெல் தற்போது செய்யப்பட்டுள்ளது. அதுவும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் 31 ஏக்கர் நிலம் நெல் சாகுபடி பரப்பாக உள்ளது. இதில் 17½ ஏக்கரில்தான் விதை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கும்பப்பூ பருவத்தில் 31 ஏக்கரிலும் சாகுபடி செய்வார்கள். அடுத்த ஆண்டு கூடுதலாக விதைநெல் கிடைக்கும். திருப்பதிசாரத்தில் தரிசாக கிடக்கும் இடத்தை விவசாய சங்கத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக முறைப்படி கடிதம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story