விஷ பாட்டிலுடன் தாலுகா அலுவலகத்துக்கு வந்த தம்பதி


விஷ பாட்டிலுடன் தாலுகா அலுவலகத்துக்கு வந்த தம்பதி
x

மகன் வீட்டை விட்டு விரட்டியதால் விரக்தி அடைந்த வயது முதிர்ந்த தம்பதியினர் தற்கொலை செய்வதற்காக தாலுகா அலுவலகத்திற்கு விஷபாட்டிலுடன் வந்த சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்

முன்னாள் ராணுவ வீரர்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி ஊராட்சி கணவாய் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வ சிகாமணி (வயது 72). இவரது மனைவி காமாட்சி (62). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2் மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகி அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர்.

மகன் முன்னாள் ராணுவ வீரராவார். சென்னையில் தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே தெய்வசிகாமணிக்கும் மகனுக்கும் சொத்து சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது இது தொடர்பாக தெய்வசிகாமணி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், பரதராமி போலீஸ் நிலையம் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர்

மேலும் ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தெய்வ சிகாமணி மற்றும் அவரது மகனை அழைத்து சமாதானம் செய்து வைத்துள்ளனர். இருப்பினும் இந்த பிரச்சினைகள் தீரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி காமாட்சி ஆகியோரை அவரது மகன் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக கூறப்படுகிறது இதனையடுத்து இருவரும் தங்களது மகள்கள் வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கி வந்துள்ளனர்.

பல நேரங்களில் உரிய உணவு கிடைக்காமலும் தங்குவதற்கு சரியான இடம் கிடைக்காமலும் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

விரக்தி

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தெய்வசிகாமணி-காமாட்சி தம்பதியர் வாழ்வதை விட சாவதே மேல் என விஷ பாட்டிலுடன் நேற்று குடியாத்தம் தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள் தாலுகா அலுவலக வாசற்படியில் சோகத்துடன் அமர்ந்த நிலையில் இருந்துள்ளனர். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் விசாரித்த போது மகன் எங்களை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த அவர்கள் தாசில்தாருக்கும், டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தாசில்தார் விஜயகுமார் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு குடியாத்தம் டவுன் போலீசாரை கேட்டுக்கொண்டார். அதன்பேரில் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சீனிவாசன் உள்ளிட்டோர் தெய்வசிகாமணி மற்றும் காமாட்சி ஆகியோரை குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடந்த சம்பவங்களை பரிவுடன் கேட்டறிந்தனர்.

மேல் நடவடிக்கைக்காக அவர்களது மனுவை பரதராமி போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.


Next Story