கியாஸ் நிரப்பியபோது தீப்பிடித்து எரிந்த வேன்
எரியோடு பஸ் நிலையம் அருகே, கியாஸ் நிரப்பி கொண்டிருந்தபோது வேன் தீப்பிடித்து எரிந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக வியாபாரி உயிர் தப்பினார்.
மளிகை வியாபாரி
திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). இவர், எரியோடு பஸ்நிலையம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் தனது வேனில் ஊர், ஊராக சென்று ஷாம்பு, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கடைகளுக்கு வினியோகம் செய்து வருகிறார்.
நேற்று காலை இவர், தனது வேனில் மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு வெளியூருக்கு புறப்பட்டார். அப்போது வேனில் கியாஸ் தீர்ந்து விட்டது. இதனால் தனது கடையின் முன்பு வேனை நிறுத்திய வெங்கடேஷ், வீட்டில் இருந்த சிலிண்டர் மூலம் வேனுக்கு கியாஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டார்.
தீப்பிடித்து எரிந்த வேன்
அப்போது, திடீரென வேனின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ், உடனடியாக வேனில் இருந்து சற்றுதூரம் தள்ளி சென்று விட்டார். சிறிதுநேரத்தில் வேன் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது.
இதனைக்கண்ட பக்கத்து கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு விரைந்தனர். பின்னர் தங்களது வீடுகளில் இருந்த குடங்களில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வேனில் இருந்த மளிகை பொருட்கள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். வேன் தீப்பிடித்து எரிந்தபோது பொதுமக்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல் இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக வியாபாரி உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
----------