வேன் தலைகுப்புற கவிழ்ந்தது; 13 பேர் காயம்
ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் விபத்து ஏற்பட்டது. இதில் வேன் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்ததில் 13 பேர் காயம் அடைந்தனர்.
ஏற்காடு
ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் விபத்து ஏற்பட்டது. இதில் வேன் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்ததில் 13 பேர் காயம் அடைந்தனர்.
சுற்றுலா
சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகள் சண்முகப்பிரியா (வயது 30). இவர் இந்தி மொழி டியூசன் நடத்தி வருகிறார். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 20 பேர் இந்தி மொழி கற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து டியூசனில் படிக்கும் 10 மாணவர்களையும் அவர்களின் பெற்றோர் அனுமதியோடு நேற்று ஒரு சுற்றுலா வேனில் ஏற்காட்டுக்கு அழைத்து சென்றார். சேலம் குண்டூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் அந்த வேனை ஓட்டினார்.
இதில் அவர்களுடன் 7 குழந்தைகளின் பெற்றோர்களும் வந்துள்ளனர். ஏற்காட்டில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு மாலையில் அவர்கள் ஏற்காடு-குப்பனூர் மலைப்பாதை வழியாக சேலத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
தலைகுப்புற கவிழ்ந்தது
வாகனம் வாழவந்தி கிராமத்தை அடுத்துள்ள ஆத்துப்பாலம் அருகில் சென்ற போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் பீமனின் மனைவி கோகிலவாணி (37), மணியின் மனைவி லட்சுமி (55), ரித்திக் (9), யாத்ரா (10), அபிராமி (18), கோகிலவாணி (38), கவிதா (12), மணிகண்டன் (20), கமலா(19), சுதா (44), பாலாஜி (14), நிவேதிதா, அபிராமி (16) ஆகியோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து காயமடைந்த அனைவரும் அருகே உள்ள வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் எந்தவித காயமும் இன்றி எந்த உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் விபத்துக்கள்
ஏற்காடு பிரதான சாலையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஏற்காட்டில் இருந்து குப்பனூர் வழியாக சேலம் செல்லும் மாற்றுப்பாதையில் வாகனங்களை செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதைதொடர்ந்து கடந்த ஒரு வாரமாக இருசக்கர வாகனங்களை தவிர அனைத்து வகை வாகனங்களும் அந்த சாலையில் சென்று வருகிறது.
இந்த நிலையில் குப்பனூர் மலைப்பாதை மிகவும் குறுகலாகவும், செங்குத்தாக மிகவும் பள்ளமான சாலையாகவும் உள்ளது. இதனால் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டுனர்களுக்கு இந்த சாலையில் வாகனங்களை ஓட்டுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வாகனங்களை இயக்கி செல்கின்றனர். இதனால் அதிக அளவில் விபத்துகள் நடந்து வருகிறது.
கடந்த 2 நாட்களில் 3 விபத்துகள் நடந்துள்ளன. இதில் நேற்று காலை அதே இடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.