வேன் கவிழ்ந்து கர்ப்பிணியின் தந்தை உள்பட 2 பேர் பலி; 6 பேர் படுகாயம்

கமுதி அருகே வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது வேன் கவிழ்ந்து கர்ப்பிணியின் தந்தை உள்பட 2 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
கமுதி,
கமுதி அருகே வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது வேன் கவிழ்ந்து கர்ப்பிணியின் தந்தை உள்பட 2 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
வளைகாப்பு நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவழிவிட்டான் (வயது 52). இவர் தனது குடும்பத்தினருடன் மதுரை வில்லாபுரம் பகுதியில் வசித்து வந்தார்.
இவரது மகள் சூரம்மாள்(26) என்பவருக்கும், கே.வேப்பங்குளத்தை சேர்ந்த பாண்டியராஜா என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களும் மதுரையில் வசித்து வருகின்றனர்.
தற்போது சூரம்மாள் கர்ப்பிணியாக இருந்தார். இதனால் தனது மகள் சூரம்மாளுக்கு சொந்த ஊரான கே.வேப்பங்குளத்தில் வளைகாப்பு நடத்த முத்துவழிவிட்டான் முடிவு செய்தார்.
வேன் கவிழ்ந்தது
அதன்படி நேற்று முத்துவழிவிட்டான் தனது மகள் சூரம்மாள் மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் மதுரையில் இருந்து சொந்த ஊரான கே.வேப்பங்குளத்துக்கு புறப்பட்டு வந்தார். வேனை ேபாஸ்(42) என்பவர் ஓட்டினார்.
வேன் கமுதியில் இருந்து கே.வேப்பங்குளம் விலக்கு சாலை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. கண் இமைக்கும் நேரத்தில் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.
2 பேர் பலி
இதனால் வேனில் இருந்தவர்கள் அய்யோ! அம்மா என அலறினார்கள். விபத்து நடந்ததும் டிரைவர் போஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தில் முத்துவழிவிட்டான், இளையவேந்தன்(9) ஆகியோர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
வேனில் வந்த கர்ப்பிணி சூரம்மாள்(26) மற்றும் உறவினர்கள் முத்தரசன் (33), கார்த்தி(6), முனியம்மாள் (40), ஒரு வயது குழந்தை ஆதிதர்ஷன், அரியநாச்சி (48) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
போலீசார் விரைந்தனர்
இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கமுதி துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கமுதி இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) விமலா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தப்பி ஓடிய வேன் டிரைவர் போசை தேடி வருகின்றனர். விபத்துக்குள்ளான வேன் தூக்கி நிறுத்தப்பட்டது.
வளைகாப்பு நிகழ்ச்சிக்காக வேனில் கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான சாதங்கள் சிதறி கிடந்தது. இதை பார்த்து உறவினர்கள் கண்ணீர் வடித்தார்கள்.
வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் கர்ப்பிணியின் தந்ைத உள்பட 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.