வேன் தலைகுப்புற கவிழ்ந்து அய்யப்ப பக்தர் பலி
வேடசந்தூர் அருகே 4 வழிச்சாலையில் வேன் தலைகுப்புற கவிழ்ந்ததில் அய்யப்ப பக்தர் பலியானார். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
அய்யப்ப பக்தர்கள்
ஆந்திர மாநிலம் சக்திசாய் மாவட்டம் கதிர்மண்டலம் பகுதியை சேர்ந்த 22 அய்யப்ப பக்தர்கள் ஒரு சுற்றுலா வேனில் கடந்த 31-ந்தேதி அங்கிருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு நேற்று முன்தினம் சபரிமலையில் இருந்து ஆந்திரா நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை அதே ஊரை சேர்ந்த பிரசாத் (வயது 40) என்பவர் ஓட்டினார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் அவர்களது வேன் வேடசந்தூரை அடுத்த விருதலைப்பட்டி பகுதியில் 4 வழிச்சாலையில் வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் 4 வழிச்சாலையின் நடுவே உள்ள தடுப்பை தாண்டி சென்று மறுபுறம் சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த நேரத்தில் எதிர்திசையில் வாகனங்கள் எதுவும் வரவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஒருவர் பலி
இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. வேனின் இடிபாடுகளில் சிக்கிய சிராமுலுநாயக் (42) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார். மேலும் ரகுநாயக், அமர்நாத், பந்த்ரே பாஸ்கர்ரெட்டி, உத்தம்ரெட்டி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். வேன் டிரைவர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி, கூம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல் பலியான சிராமுலுநாயக்கின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
டிரைவருக்கு வலைவீச்சு
இந்த விபத்து குறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய டிரைவர் பிரசாத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.
4 வழிச்சாலையில் அய்யப்ப பக்தர்கள் சென்ற வேன் தலைகுப்புற கவிழ்ந்ததில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.