நடுரோட்டில் வேன் கவிழ்ந்தது; 13 பேர் காயம்
கூடலூரில் நடுரோட்டில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் காயமடைந்தனர். நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கூடலூர்,
கூடலூரில் நடுரோட்டில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் காயமடைந்தனர். நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வேன் கவிழ்ந்தது
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் ஒரு வேனில் நேற்று காலை 10 மணிக்கு நீலகிரி மாவட்டம் பந்தலூர் செல்வதற்காக கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மேல் கூடலூர் பகுதியில் வந்த போது, திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது வேனுக்குள் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர்.
இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், வாகன ஓட்டிகள் ஓடி வந்து வேனுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் திருப்பூரை சேர்ந்த அஜித் (வயது 25), பீம் (22), சஞ்சய் (35), முரளிதரன் (18), தேவேந்திரன் (50), ராஜ்குமார் (30), விகாஷ் (20) உள்பட 13 பேர் காயமடைந்தனர். அவர்கள் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் நடுரோட்டில் வேன் கவிழ்ந்து கிடந்ததால், ஊட்டி-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் உள்பட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மீட்பு வாகனம் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் போராடி சுற்றுலா வேன் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து 1½ மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, பந்தலூர் பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு செல்வதற்காக திருப்பூரில் இருந்து சுற்றுலா வேனில் வந்து உள்ளனர். கட்டுப்பாட்டை இழந்ததால் வேன் கவிழ்ந்தது என்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், சமவெளியில் இருந்து வருபவர்கள் மலைப்பாதையில் கவனமாக இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.