விபத்தில் இறந்தவர் உடல் மீது அடுத்தடுத்து ஏறி இறங்கிய வாகனங்கள்
நாட்டறம்பள்ளி அருகே நள்ளிரவில் நடந்த விபத்தில் பலியானவரின் உடல்மீது 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏறி இறங்கியதில் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் சிதைந்தது.
நாட்டறம்பள்ளி அருகே நள்ளிரவில் நடந்த விபத்தில் பலியானவரின் உடல்மீது 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏறி இறங்கியதில் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் சிதைந்தது.
வாகனம் மோதி பலி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கல்லு குட்டை அருகே பங்களாமேடு என்ற இடத்தில் நள்ளிரவு 1 மணியளவில் கிருஷ்ணகிரி -வாணியம்பாடி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நள்ளிரவு என்பதால் அவர் இறந்து கிடந்ததை கவனிக்காமல், அந்த வழியாக வந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உடல் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் முழுவதும் அடையாளம் தெரியாத வகையில் உருக்குலைந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கரண்டி மூலம்
தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் சாலையில் சிதறி கிடந்த உடல் பாகங்களை கரண்டி மூலம் சுரண்டி எடுத்து வாளியில் போட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விபத்தில்இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. உடல்முழுவதும் சிதைத்துபோனதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் சாலையில் சிதறி கிடந்த உடலை சேகரித்து சப்-இன்ஸ்பெக்டர் வாளியில் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலானது.