பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை


பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை
x

தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு நடத்தி பணம் வசூல் செய்த ஏஜெண்டு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் தெள்ளார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

வந்தவாசி

தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு நடத்தி பணம் வசூல் செய்த ஏஜெண்டு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் தெள்ளார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீபாவளி, பொங்கல் சீட்டு

வந்தவாசியை அடுத்த குணக்கம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவர் 2 தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் சுமதி தெள்ளார் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு கட்டினால் தங்கம், வெள்ளி, மளிகை பொருட்கள், சீர்வரிசை சாமான்கள் உள்ளிட்டவை கவர்ச்சிகரமான பொருட்கள் தருவதாக கூறி பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார்.

இதில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் சம்சு மொய்தீன் என்பவர் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பு தலை மறைவானார்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்த நிலையில் சுமதியிடம் பணத்தைக் கட்டியவர்கள் பணத்தைத் திரும்பி கேட்டுள்ளனர். இதற்கு சுமதி சரியான பதில் கூறவில்லை என கூறப்படுகிறது.

மேலும் சுமதி தினமும் தெள்ளார் பகுதியில் உள்ள நகை, அடகு கடைக்கு வந்து தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் விற்பனை செய்துவிட்டு செல்வதாக தகவல் வெளியானது. இதையடுத்து இன்று பணத்தைக் கட்டி ஏமாந்தவர்கள் நகை அடகு கடை முன்பு திரண்டனர்.

அப்போது நகை அடகு கடைக்கு சுமதி காரில் வந்தார். இதை பார்த்த பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக காரை மடக்கிப் பிடித்தனர். மேலும் கார்களின் டயர்களில் உள்ள காற்றுகளை பிடுங்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தெள்ளார் போலீசார் சம்பவ இடத்திலிருந்து சுமதியை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் சுமதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தெள்ளார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story