பிலிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது
4 மாணவிகள் பலியான சம்பவத்தால் பிலிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது. பள்ளியை பெற்றோர்கள், உறவினர்கள் முற்றுகையிட்டு ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சோகத்தில் மூழ்கியது
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம் பிலிப்பட்டி கிராமம் அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் சோபியா, தமிழரசி, இனியா, லாவண்யா ஆகியோர் கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த மாணவிகள் 4 பேரின் சொந்த ஊர் பிலிப்பட்டி கிராமம் ஆகும்.
இந்த நிலையில் விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற மாணவிகளில் 4 பேர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து நேற்று மதியத்திற்கு மேல் பிலிப்பட்டி பள்ளிக்கும், அந்த ஊரில் உள்ளவர்களுக்கும் தகவல் வந்தது. இதனை கேள்விப்பட்டு, மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். ஒரு சிலர் மயக்கம் அடைந்தனர். பலியான மாணவிகளின் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மாணவிகள் பலியான செய்தி கேட்டு ஊர் பொதுமக்களும் சோகமடைந்தனர். அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியது.
பள்ளியை முற்றுகை
பள்ளியின் முன்பு பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர், பலியான மாணவிகளின் உறவினர்கள் திரண்டனர். மேலும் பள்ளியை முற்றுகையிட்டு அங்கிருந்த ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. உடனடியாக பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் பள்ளியின் முன்பு குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சரவணன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பள்ளியின் வெளியே பொதுமக்கள் திரண்டிருந்தனர். மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்ற ஆசிரியர்களை இங்கே வர வைக்க வேண்டும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியர்கள் கவனக்குறைவாக இருந்தது எப்படி? என ஆவேசத்துடன் கூறிய படி பொதுமக்கள் நின்றனர்.
அழுகுரல்
பள்ளியின் முன்பும், வளாகத்திலும் பெண்கள் ஆங்காங்கே அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதபடி இருந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் அழுகுரலாக கேட்டது. இது அங்கிருந்த அனைவரது மனதையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.
தலைமை ஆசிரியை உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
4 மாணவிகள் பலியான சம்பவத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியை பொட்டுமணி அஜாக்கிரதையாக இருந்ததற்காகவும், மாணவிகளை விளையாட்டிற்கு அழைத்து சென்ற பொறுப்பாசிரியர்கள் செபகேயுன் இப்ராகிம், ஆசிரியை திலகவதி ஆகியோர் கவனக்குறைவாக செயல்பட்டதாகவும் என 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பள்ளியில் வகுப்புகள் பாதியில் நிறுத்தம்
விளையாட்டு போட்டிக்கு சென்றதில் 4 மாணவிகள் இறந்த சம்பவம் குறித்த தகவல் பள்ளிக்கு வந்ததும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரையிலானதில் நடைபெற்ற வகுப்புகளை பாதியில் நிறுத்தினர். மேலும் பள்ளியில் இருந்த மாணவ-மாணவிகளை வீட்டுக்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர். மாணவிகள் பலியான தகவல் கேள்விப்பட்டு பள்ளியில் மாணவ-மாணவிகள் சோகமடைந்தனர்.