கிராமத்தை தூய்மையாக வைக்க வேண்டும்
சுற்றுச்சூழலை பாதுகாக்க கிராமத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஊட்டி,
சுற்றுச்சூழலை பாதுகாக்க கிராமத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கிராம சபை கூட்டம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நஞ்சநாடு ஊராட்சி சமுதாயக்கூடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில் ஊராட்சியில் அனைவருக்கும் அடிப்படை தேவைகள் கிடைக்கும் வகையில் செயல்படுதல் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் கலெக்டர் அம்ரித் பேசும்போது கூறியதாவது:-
தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரையில் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் குழந்தைகள் பயன் பெற்றனர். சுதந்திர தினத்தையொட்டி, நஞ்சநாடு ஊராட்சியில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
நீலகிரியில் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், தேயிலை அதிகமாக விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். அவர்களுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொண்டு வாழ்வை மேம்படுத்த வேண்டும். மகளிர் திட்டத்துறை சார்பில், மகளிர் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்த சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் ஏராளமான கடனுதவிகள் வழங்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், அரசால் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், மகளிர் திட்ட இயக்குநர் ஜாகீர் உசேன், ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சி கள்) சாம் சாந்தகுமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன், நஞ்சநாடு ஊராட்சி தலைவர் சசிகலா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.