அரசு கொள்முதல் நிலையத்தை, கிராமமக்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம்
அரசு கொள்முதல் நிலையத்தை, கிராமமக்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம்
மெலட்டூர், செப்.27-
பாபநாசம் தாலுகா தேவராயன்பேட்டை அருகே உள்ள பொன்மான்மேய்ந்தநல்லூர் கிராமத்தில் அரசு கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு பணிபுரிந்த 4 சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீரென பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மேலாளர், கோட்ட மேலாளர் ஆகியோருக்கு புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பில் தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி மனோகர் தலைமையில் தேவராயன்பேட்டை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாரதி, தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி குமார் மற்றும் கிராமமக்கள் அரசு கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நுகர்பொருள் வாணிப கழக கொள்முதல் அலுவலர் சுரேஷ்குமார், பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.