ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய சாலை அமைக்க கோரிஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகைதிருவெண்ணெய்நல்லூரில் பரபரப்பு
ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய சாலை அமைக்க கோரி, திருவெண்ணெய்நல்லூரில் ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மேற்கு தெருவில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த தெருவில் நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய கோரி, அதிகாரிகளிடம் பல முறை அப்பகுதி மக்கள் மனு அளித்தும் இதுவரைக்கும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று தெருவில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை
ஆனால், அங்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து அவர்கள் மதியம் 12.30 மணிக்கு திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அதோடு நுழைவு வாயிலில் அமர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, நந்தகோபால கிருஷ்ணன், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோரிக்கைகள்
அப்போது, கிராம மக்கள் தரப்பில் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கழிவுநீர் வழிந்தோட தற்காலிகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கழிவுநீர் கால்வாயுடன் புதிய சாலை அமைப்பதுடன், தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.