கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராமமக்கள்
திருவிழந்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராமமக்கள்
மே தினத்தை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. அந்த வகையில், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவிழந்தூர் ஊராட்சி வேப்பங்குளம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த ஊராட்சியில் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள தெருக்களுக்கான சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், வரவு செலவுகள் பற்றி கிராம மக்கள் விளக்கம் கேட்டனர். அப்போது ஊராட்சி செயலர் கூட்டத்தில் பங்கேற்காததால் வரவு செலவுகள் குறித்து பின்னர் விளக்கம் அளிக்கப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்களில் ஒரு பகுதியினர் கூட்டத்தை புறக்கணித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து வரவு செலவு கணக்குகள் குறித்து உரிய விளக்கம் அளிப்பதாகவும், குடிநீர் வசதி செய்து தருவதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.