செம்மண் அள்ளிய லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்
மேற்கு தொடர்ச்சி மலைடிவாரம் செம்மண் அள்ளிய லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
ஆத்தூர் அருகே மல்லையாபுரம் மேற்கு தொடர்ச்சி மலைடிவாரம் மற்றும் அங்குள்ள விவசாய நிலங்களில் இருந்து தனியார் சிலர் லாரிகள் மூலம் இரவு, பகலாக செம்மண் அள்ளி வருகின்றனர். பின்னர் அந்த லாரிகள் மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி கிராமங்கள் வழியாக சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் லாரிகள் அதிவேகமாக செல்வதால், கிராம மக்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடன் சாலைகளில் செல்லும் சூழல் உள்ளது. இதனால் கிராமங்கள் வழியாக லாரிகள் மண் அள்ளி செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும், செம்மண் அள்ளுவதால் இயற்கை வளம் பாதிக்கப்படும் சூழல் உள்ளதால், அதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர், ஆத்தூர் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்திருந்தனர். ஆனால் இதுதொடர்பாக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று மல்லையாபுரம் வழியாக செம்மண் அள்ளிக்கொண்டு 10 லாரிகள் அடுத்தடுத்து வந்தன. இதனை பார்த்த கிராம மக்கள், செம்மண் அள்ளி வந்த லாரிகளை சிறைபிடித்தனர். அப்போது ஒருதரப்பினர் அங்கு வந்து, தங்களது தோட்டங்களில் உள்ள செம்மண்ணை தேவைக்காக விற்பனை செய்வதாகவும், இதனை தடுக்கக்கூடாது என்றும், கிராமங்கள் வழியாக லாரிகளை மெதுவாக இயக்குவதாகவும் கூறினர். இதையடுத்து கிராம மக்கள் லாரிகளை விடுவித்தனர். இருப்பினும் இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.