மின்வாரிய அதிகாரிகள் வாகனத்தை கிராமமக்கள் சிறைபிடிப்பு
ஆரணி அருகே மின்வாரிய அதிகாரிகள் வாகனத்தை கிராமமக்கள் சிறைபிடிப்பு
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிைய அடுத்த மேல் சீசமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பனஞ்சேரி, சோழம்பட்டு, மோட்டூர் உள்பட பல கிராமங்களில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஆனால் 3 நாட்களுக்கு மேலாகியும் மின் வினியோகம் சீராகவில்லை. இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கிராம மக்கள் பலமுறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஆரணியில் இருந்து மேல் சீசமங்கலத்திற்கு மின் கம்பங்களை ஏற்றிக் கொண்டு வாகனங்கள் வந்தன. அதனை தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகளும் மற்றொரு வாகனத்தில் சென்றனர்.
தகவல் அறிந்த கிராம பொதுமக்கள் அதிகாரிகள் வந்த வாகனத்தை சிறை பிடித்தனர்.
உடனடியாக ஆரணி தாலுகா போலீசார் விரைந்து சென்று பொது மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போதுஆரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கதிரவன் உள்பட அலுவலர்கள் அவர்களிடம் மின்வினியோகத்தை சீர் செய்து உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.