நம்பியார் நகர் கிராம மக்கள் சோகம்


நம்பியார் நகர் கிராம மக்கள் சோகம்
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலில் விழுந்து மாயமான மீனவர் கிடைக்காததால் நாகை நம்பியார் நகர் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க கண்ணீர் மல்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்


கடலில் விழுந்து மாயமான மீனவர் கிடைக்காததால் நாகை நம்பியார் நகர் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க கண்ணீர் மல்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர் மாயம்

நாகை நம்பியார் நகரை சேர்ந்தவர் அஞ்சப்பன் (வயது 58). அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது விசைப்படகில் அஞ்சப்பன் உள்ளிட்ட 11 மீனவர்கள் கடந்த 28-ந்தேதி நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, பலத்த காற்று வீசியதால் கடல் சீற்றம் காரணமாக விசைப்படகின் பக்கவாட்டில் நின்ற அஞ்சப்பன் கடலில் தவறி விழுந்தார். இதையடுத்து படகில் இருந்த சக மீனவர்கள், அஞ்சப்பனை தேடியும் அவர் கிடைக்கவில்லை.

மீன்பிடிக்க செல்லவில்லை

பின்னர் இந்திய கடலோர காவல் படையுடன் சேர்ந்து தேடியும் நடுக்கடலில் மாயமான மீனவர் அஞ்சப்பன் கிடைக்காததால் நேற்று அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனால் நாகை நம்பியார் நகர் மீனவர்கள் 4-வது நாளாக நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து அஞ்சப்பனை மீட்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மீனவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். கடலில் விழுந்து 4 நாட்கள் ஆகியும், காணாமல் போன மீனவர் கிடைக்காததால், நாகை நம்பியார் நகர் மீனவ கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

ஆறுதல்

இந்த நிலையில் தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், அஞ்சப்பன் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் ரூ.20 ஆயிரம் வழங்கியதுடன், அஞ்சப்பன் மகளின் கல்வி செலவை ஏற்பதாக தெரிவித்தார். அப்போது, நகர்மன்ற தலைவர் மாரிமுத்து மற்றும் மாவட்ட பொருளாளர் லோகநாதன் உள்பட மீனவ பஞ்சாயத்தினர் உடன் இருந்தனர்.



Next Story