விச்சலூர் படுகை கிராம மக்கள் அவதி
பூதலூர் அருகே குறைந்த மின்னழுத்தம் காரணமாக விச்சலூர் படுக்கை கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூர் அருகே குறைந்த மின்னழுத்தம் காரணமாக விச்சலூர் படுகை கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறைந்த மின்அழுத்தம்
பூதலூர் தாலூகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் விச்சலூர் படுகை என்ற சிறிய கிராம பகுதி உள்ளது. இப்பகுதியை சுற்றிலும் நெல் வயல்கள் உள்ளன. விவசாயம் நடைபெறும் காலங்களில் பசுமையான சூழலில் காணப்படும் இந்த பகுதி கோடை காலங்களில் முற்றிலும் தரிசாக காட்சி அளிக்கும்.
இங்குள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு உள்ளது. ஆனால் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்விசிறிகள் மெதுவாக சுழல்கிறது. மின் விளக்குகள் குறைந்த அளவில் வெளிச்சம் தருகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
டிரான்ஸ்பாா்மா்
இந்த குடியிருப்புக்கு என்று தனியாக டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்காக மின்கம்பங்கள் நடப்பட்டு பல ஆண்டுகளாகியும் இன்னமும் டிரான்ஸ்பார்மர் பொருத்தப்படவில்லை. தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் இந்த குடியிருப்பு மக்கள் இரவில் மின்விசிறி இல்லாமல் தூக்கம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே மின்சார வாரியத்தினர் விச்சலூர் படுகை கிராமத்திற்கு தனி டிரான்ஸ்பாா்மா் பொருத்தி சரியான அழுத்தத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.