நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
போலி பத்திர பதிவை ரத்து செய்ய வலியுறுத்தி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
போலி பத்திர பதிவை ரத்து செய்ய வலியுறுத்தி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, உதவி கலெக்டர்கள் கோகுல் (பயிற்சி), குமாரதாஸ் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மானூர் தாலுகா நல்லம்மாள்புரம் கிராம மக்கள் ஊர் தலைவர் கருப்பையா, பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் தேவேந்திரன், மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில், கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
அதில், ''எங்கள் கிராமத்தில் உள்ள புஞ்சை நிலங்களை ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்காகவும், விவசாயத்திற்காகவும் பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் எங்களுக்கு பாத்தியப்பட்ட 112 ஏக்கர் நிலங்களுக்கு அதிகமான பட்டா நிலங்கள், போலி பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த போலி பத்திர பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று பத்திரப்பதிவுத்துறை அதிகாரிக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போலி பத்திர பதிவை ரத்து செய்து எங்கள் நிலத்தை மீட்டு தர வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.
பால் உற்பத்தியாளர் சங்கம்
மேலகுளம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தலைவர் பெரிய பெருமாள் தலைமையில் மனு வழங்கினர். அதில்,, ''நாங்கள் பால், நெய் விற்பனை செய்ய வைத்துள்ள 32 டப்ஸ்களை ஆவின் எடுத்துச்சென்று விட்டது. இதனால் நாங்கள் 1,000 லிட்டர் பால் விற்பனை செய்வது பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே எங்களிடம் எடுத்துச்சென்ற 32 டப்ஸ்களை உடனே எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதுகுறித்து ஏற்கனவே ஆவினுக்கும், பால்வளத்துறைக்கும் மனு அனுப்பி உள்ளோம்'' என்று கூறியுள்ளனர்.
சேரன்மாதேவி நாலந்தா தெரு மக்கள் வழங்கிய மனுவில், ''சேரன்மாதேவியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனை ரெயில்வே துறையினர் மோட்டார் மூலம் வெளியேற்றி வருகிறார்கள். அப்படி இருந்தும் தண்ணீர் அங்கேயே தேங்கி நிற்கிறது. இதனால் எங்கள் ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இந்த சுரங்கப் பாதையை மூடி விட்டு, புதிய பாதை அல்லது தானே இயங்கும் ரெயில்வே கேட் அமைத்து தர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.
அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதி
விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி கொடுத்த மனுவில், ''ஒரு நடிகர் பெயரில் வீடு கட்டித்தருவதாக கூறி எங்களிடம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
நெல்லை அருகே நாரணமாள்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி திருமா அழகு கொடுத்த மனுவில், ''பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் குடிதண்ணீர் வசதி இல்லை, கழிப்பிட வசதி மிகவும் மோசமாக உள்ளது. ஆஸ்பத்திரிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனே செய்து தர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பேட்டரி மடக்கு சக்கர நாற்காலியும், ஒருவருக்கு 3 சக்கர சைக்கிள் மற்றும் 40 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.