சாலை வசதி கேட்டு சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்திய கிராம மக்கள்
ஓட்டப்பிடாரம் அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் தாலுகா பசுவந்தனை பஞ்சாயத்து வடக்கு கைலாசபுரம் கிராமத்தில் போதிய வாறுகால் வசதி இல்லை என்பதால் கழிவு நீர் வெளியே செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி கிடக்கும் நிலைமை உள்ளது. மேலும் சரியான சாலை வசதியும் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். மேலும் மழைக் காலங்களில் கழிவு நீருடன், மழை நீரும் தேங்கி நிற்பதால் பலவிதமான தொற்று நோய்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால் சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரில் தேங்காய், பழம் வைத்து பூஜை செய்து நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் ஓட்டப்பிடாரம் துணை தலைவர் காசிவிஸ்வநாதன் ஆகியோர் வடக்கு கைலாசாரம் கிராமத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், "உடனடியாக சாலை வசதி, வாறுகால் வசதி, கலையரங்கம், சமுதாயம் நலக்கூடம் அமைக்கப்படும் என்றும், மக்களின் கோரிக்கைகளை விரைவாக செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொலைபேசியில் எம்.எல்.ஏ. தொடர்பு கொண்டு 3 மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.