மயானத்திற்கு இடம் ஒதுக்க வலியுறுத்தி சாலை பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்; ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு


மயானத்திற்கு இடம் ஒதுக்க வலியுறுத்தி சாலை பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்; ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 13 Sept 2023 2:30 AM IST (Updated: 13 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே மயானத்திற்கு இடம் ஒதுக்க வலியுறுத்தி சாலை பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே மயானத்திற்கு இடம் ஒதுக்க வலியுறுத்தி சாலை பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மயான இடம்

ஆண்டிப்பட்டி அருகே ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மயானம் அமைந்துள்ள பகுதியில் அரசுக்கு சொந்தமான இடங்களில் நூலகம், குப்பைக்கிடங்கு, உரக்கிடங்கு, கிராம சேவை மையம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதனால் அங்கு மயான இடத்தின் பரப்பளவு மிகவும் சுருங்கிவிட்டது.

மேலும் அங்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் எதுவும் இன்று வரையில் திறக்கப்படாமல் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக காணப்படுகிறது. அதனை திறப்பதுடன், மயானத்திற்கு கூடுதல் இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரையில் இடம் ஒதுக்கப்படவில்லை.

இதற்கிடையே பாலகிருஷ்ணாபுரத்தில் மயானம் மற்றும் அரசு கட்டிடங்கள் உள்ள பகுதியில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான பணிகள் தொடங்கியது. ஏற்கனவே மயானத்திற்கு இடம் போதுமான அளவில் இல்லாத நிலையில் தற்போது சாலை அமைக்கும் பணியை ஊராட்சி நிர்வாகம் தொடங்கியதால் அப்பகுதி மக்கள் விரக்தி அடைந்தனர்.

சாலை பணி தடுத்து நிறுத்தம்

இந்தநிலையில் சாலை அமைக்கும் பணி நடைபெறும் இடத்திற்கு கிராம மக்கள் நேற்று திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி, அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது மயானத்திற்கு போதுமான இடம் ஒதுக்கீடு செய்த பின்னர் சாலை பணியை தொடங்குமாறு கூறி, பொதுமக்கள் அந்த பகுதியில் கயிற்றை கட்டி அடைத்தனர். இதனால் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

சாலை பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story