பிரசார வாகனத்தை கிராமமக்கள் திடீர் முற்றுகை
திருக்கோவிலூா் அருகே பிரசார வாகனத்தை கிராமமக்கள் திடீர் முற்றுகை குடிநீர் பிரச்சினையை தீர்க்காததால் ஆத்திரம்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள முகையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதை தீர்க்க வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை நடைபெற உள்ள கிராம சபா கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஜீப்பில் ஒலிபெருக்கி அமைத்து தெரு தெருவாக அறிவித்தபடி வந்தனர். நேற்று வீரபாண்டி கிராமத்துக்குள் ஜீப் வந்தபோது கிராமக்கள் திடீரென ஜீப்பை முற்றுகையிட்டனர். அப்போது முதலில் கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வையுங்கள். அதன் பிறகு கிராமசபா கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றி முடிவு செய்யலாம் என கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து அந்த ஜீப் அங்கிருந்து திரும்பி சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.