போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்வதாக கிராம மக்கள் திடீர் போராட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்வதாக கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்வதாக கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருதரப்பினர் மோதல்
தண்டராம்பட்டு தாலுகா ரெட்டியார்பாளையம் கிராமத்தில் இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 28-ந் தேதி இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஒருவருக்கு அரிவாளால் வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து வெட்டு காயம் அடைந்தவரின் தரப்பை சேர்ந்தவர்கள் எதிர் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை அரசு பஸ்சை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தானிப்பாடி போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
போராட்டம்
இந்த நிலையில் நேற்று காயம் அடைந்தவரின் தரப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
அப்போது அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக போர்டிகோ முன்பு தரையில் அமர்ந்து பாதிக்கப்பட்ட எங்கள் தரப்பினர் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்வதாகவும், தங்களுக்கு தனி இடம் வழங்கக் கோரிக்கையும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொய் வழக்கு பதிவு
அப்போது அவர்கள், இருதரப்பினருக்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் போலீசார் முறையாக விசாரிக்காமல் எங்கள் பகுதி இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்தாகவும், தங்களுக்கு தனி இடம் வழங்க வேண்டும் என்றும் கூறினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்களை மாவட்ட வருவாய் அலுவலரின் அருகில் தரையில் வைத்து அவரிடம் ஒப்படைத்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தங்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர், தங்கள் பகுதி வருவாய் துறை அதிகாரிகள் நேரில் செய்து ஆய்வு செய்வார்கள் என்றும், இருதரப்பினரையும் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் அழைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.