ஆக்கிரமிப்பை கண்டித்து கிராமமக்கள் திடீர் உண்ணாவிரதம்
கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பை கண்டித்து கிராமமக்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெண்ணாடம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணாடம்;
பெண்ணாடம் அருகே உள்ள சவுந்தர சோழபுரம் கிராமத்தில் பழைய காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி தரக்கோரி இந்து அறநிலையத்துறை, மாவட்ட கலெக்டர் மற்றும் திட்டக்குடி தாசில்தார் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
உண்ணாவிரதம்
இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் ஒன்று திரண்டு அங்குள்ள மாரியம்மன் கோவில் முன்பு திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக நாளை(அதாவது இன்று) வெள்ளிக்கிழமை திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணலாம் என தாசில்தார் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறினர். இதை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பரபரப்பு
கோவில் இடத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து கிராமமக்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.