கம்மாபுரம் அருகே சுவர் இடிந்து விழுந்து முதியவர் சாவு: மழைக்கு ஒதுங்கியவருக்கு நேர்ந்த பரிதாபம்
கம்மாபுரம் அருகே மழைக்கு ஒதுங்கியபோது, ஓட்டல் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கம்மாபுரம்,
விருத்தாசலம் அருகே உள்ள சிறுவரப்பூரை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 75). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். கம்மாபுரம் அடுத்த கிளிஞ்சமேடு டாஸ்மாக் கடை அருகில் வந்த போது, திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதனால் அவர், அங்குள்ள ஓட்டல் கட்டிடம் அருகில் ஒதுங்கி நின்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஓட்டல் கட்டிடத்தின் சுவர் இடிந்து ரங்கநாதன் மீது விழுந்தது.
இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரங்கநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மழைக்கு ஒதுங்கிய முதியவர், சுவர் இடிந்து விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.