சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
தெற்கு கோனார்கோட்டையில் சுவர் இடிந்து விழுந்து பெண் பலியானார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள செட்டிகுறிச்சி பஞ்சாயத்து தெற்கு கோனார் கோட்டை புதூர் மேல தெருவில் வசித்து வருபவர் அழகர்சாமி. விவசாயி. இவரது மனைவி பொன்னுத்தாய் (வயது 42). இவர் வீட்டின் முன்பு சமையல் செய்து பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது அழகர்சாமி தோட்டத்திற்கு செல்வதற்காக வீட்டின் முன் நின்று கொண்டு இருந்த டிராக்டரை இயக்கி, பின்னோக்கி நகர்த்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் வீட்டின் முன்புறம் இருந்த பழைய சுவற்றில் மோதியது. இதில் அந்த சுவர் இடிந்து பொன்னுத்தாய் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்து அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.