குளத்தில் கொட்டப்பட்ட கழிவுகள்
குளத்தில் கொட்டப்பட்ட கழிவுகள்
போடிப்பட்டி,
மடத்துக்குளம் அருகே லாரியில் மூட்டை மூட்டையாக குப்பைகளைக் கொண்டு வந்து இரவோடு இரவாக குளத்தில் கொட்டிச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர் நிலைகள்
தற்போது நகரம் முதல் கிராமம் வரை உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் சில பகுதிகளில் அந்த திட்டத்தை முறையாக செயல்படுத்ததாலும், பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்காததாலும் ரோட்டோரங்களில் குப்பை மலைகள் உருவாகி சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது.அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்களால் பாசன வசதிக்காகவும், நிலத்தடி நீராதாரங்களை மேம்படுத்தும் விதமாகவும் உருவாக்கப்பட்ட பல நீர்நிலைகள் மற்றும் நீர் வழித் தடங்களை குப்பைகளைக் கொட்டி பாழாக்கி வருகின்றனர்.
அந்தவகையில் மடத்துக்குளம் ஒன்றியம் துங்காவி ஊராட்சிக்குட்பட்ட குமாரமங்கலம் குளத்தின் மறுகால் பகுதியில் இரவோடு இரவாக மூட்டை மூட்டையாக குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டிச் சென்றுள்ளனர்.அதில் மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக், தெர்மோகோல் உள்ளிட்ட பல்வேறு விதமான கழிவுகள் உள்ளன.அதுமட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேடு விளைவிக்கக்கூடிய ஆபத்தான எலக்ட்ரானிக் மற்றும் மருத்துவக் கழிவுகளும் இதனுடன் கலந்திருக்கும் அபாயம் உள்ளது.இந்த கழிவுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதுடன் அந்த பகுதி முழுவதும் பாழாகும் நிலை உள்ளது.
கழிவுகள்
சமீபத்தில் தான் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் இந்த குளம் தூர் வரப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் வழிகாட்டலின் படி ஊராட்சி நிர்வாகத்தால் இந்த பகுதி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது. மேலும் இந்த பகுதியில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு சுதந்திர தினத்தன்று ஊராட்சித் தலைவரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. ஆனால் இத்தனை சுத்தம் செய்த இடத்தில் இரவோடு இரவாக லாரி லாரியாக குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டிச் சென்றுள்ளனர். இதுபோன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். மேலும் இந்த குப்பை மூட்டைகளைப் பிரித்து ஒருசிலர் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கின்றனர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் குப்பைமேடாக மாறும் நிலை உள்ளது.எனவே உடனடியாக இந்த குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொது சுகாதாரம் மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்புக்கு கேடு விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்ற அச்சம் ஒவ்வொருவருக்கும் உருவாகும் வகையிலான நடவடிக்கைகளே இதுபோன்ற அலட்சியப் போக்குக்கு நிரந்தர தீர்வாக இருக்கும்'என்று பொதுமக்கள் கூறினர்.
---