பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடியை கடந்தது
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடிைய கடந்தது. இதனால், அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
குலசேகரம்:
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடிைய கடந்தது. இதனால், அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
அணைகளின் நீர்மட்டம் உயர்வு
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 48 அடி கொள்ளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று 45 அடியை கடந்தது. இதையடுத்து வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் அணையில் இருந்து நேற்று மதியம் 12 மணிக்கு வினாடிக்கு 1,060 கன அடி தண்ணீர் மறுகால் மதகுகள் வழியாக திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 45.70 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 1,600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் பிற்பகலில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததாலும், வரும் நாட்களில் தொடர் மழை பெய்யும் என வானிலை முன்னறிப்புகள் வந்ததாலும் மாலை 4 மணிக்கு அணையில் இருந்து மேலும் வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்படி மொத்தம் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளது.
திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு
இதனால் கோதையாறு மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் கோதையாறு வழியாக திற்பரப்பு அருவியில் பாய்வதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மாலையில் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறியதாவது:-
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் உச்ச அளவை நோக்கி நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை அறிவிப்புகள் வந்துள்ளது. இதனால், மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. கோதையாறு மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.