குமரியில் மழை நீடிப்பு:பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியது


குமரியில் மழை நீடிப்பு:பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியது
x

குமரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியது. பாலமோரில் 27.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியது. பாலமோரில் 27.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மழை

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே போல் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது.

அதே சமயம் நீர்பிடிப்பு மற்றும் மலையோர பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளில் நீர்மட்டம் 'கிடு, கிடு' வென உயர்ந்து வருகிறது.

பெருஞ்சாணி அணை 70 அடியை தாண்டியது

பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 42.47 அடியாக உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 42 அடியை தாண்டியதுமே கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 951 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 261 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதே சமயம் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டமும் 70 அடியை தாண்டி 70.05 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,247 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 535 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 52 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 77 கன அடி தண்ணீரும் வந்தது.

பொய்கை அணைக்கு வினாடிக்கு 5 கனஅடி நீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 4 கன அடி தண்ணீரும் வந்து கொண்டு இருக்கிறது. முக்கடல் அணைக்கு வினாடிக்கு 10.5 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறக்கப்படுகிறது.

பாலமோரில் 27.2 மில்லி மீட்டர்

மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 27.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. தற்போது அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆறு மற்றும் கால்வாய்களில் தண்ணீர் அதிகளவு ஓடுகிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 27.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பெருஞ்சாணி அணை- 2.4, புத்தன் அணை- 1.2, சிற்றார் 2- 3.2, மாம்பழத்துறையாறு- 4, முக்கடல் அணை- 3, பூதப்பாண்டி- 3.2, கன்னிமார்- 4.4, மயிலாடி- 8.4, நாகர்கோவில்- 3, தக்கலை- 2, ஆரல்வாய்மொழி- 5.4, ஆனைக்கிடங்கு- 2.4 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.


Next Story