பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 2½ அடி உயர்வு
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பெய்த கனமழையால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2½ அடி உயர்ந்தது. திற்பரப்பு அருவியில் அதிக அளவு வெள்ளம் கொட்டுகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பெய்த கனமழையால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2½ அடி உயர்ந்தது. திற்பரப்பு அருவியில் அதிக அளவு வெள்ளம் கொட்டுகிறது.
பருவமழை
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சிற்றார் 2 பகுதியில் 36.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. மலையோரம் மற்றும் நீா்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு அதிக அளவிலான தண்ணீர் வருவதால், அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. இதையடுத்து நேற்று இங்கு வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
சூறைக்காற்றுடன் மழை
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் சாரல் மழையுடன் சூறைக்காற்று வீசியது. நேரம் செல்ல செல்ல சாரல் மழை கனமழையாக கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ரப்பர் தோட்டங்களில் பால்வெட்டும் தொழில் முடங்கியுள்ளது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 23.4, பெருஞ்சாணி அணை- 9.6, புத்தன் அணை- 8.8, சிற்றார் 1- 26, மாம்பழத்துறையாறு அணை- 3, முக்கடல் அணை- 4.6, பூதப்பாண்டி- 7.2, கன்னிமார்- 9.6, குழித்துறை- 2, மயிலாடி- 1.6, நாகர்கோவில்- 1.2, சுருளோடு- 9.2, தக்கலை- 5, இரணியல்- 2, மாம்பழத்துறையாறு- 3, திற்பரப்பு- 9.6, பாலமோர்- 18.6, ஆரல்வாய்மொழி- 1, அடையாமடை- 7.2, முள்ளங்கினாவிளை- 4.6, ஆனைக்கிடங்கு- 1.2 என பதிவாகி இருந்தது.
அணைகளின் நீர்மட்டம்
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்றுமுன்தினம் 17.45 கன அடியாக இருந்ததது. மலையோர பகுதிகளில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 2½ அடி உயர்ந்து நேற்று அணையின் நீர்மட்டம் 19.95 கன அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 61 கனஅடி நீர் வந்தது. சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 85 கனஅடி நீர் வருகிறது.
பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 774 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 641 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 241 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 20 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.