தென்னை மர உயரத்துக்கு பீய்ச்சியடித்த தண்ணீர்
குடிநீர் குழாயில் வால்வு உடைந்ததால், தென்னை மர உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சியடித்தது.
வேடசந்தூரை அடுத்த சேனன்கோட்டை அருகே காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் உள்ளது. இங்கிருந்து, ஒட்டன்சத்திரத்துக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் சீத்தமரம் நால்ரோடு அருகே ராட்சத குழாயில் பொருத்தப்பட்டிருந்த வால்வு திடீரென உடைந்தது. இதனால் தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.
வால்வு அருகே உள்ள தென்னை மர உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சியடித்தது. இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது. சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீர் வீணாக சென்றது. இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்தனர்.
பின்னர் ஒட்டன்சத்திரத்துக்கு செல்லும் குழாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து குடிநீர் குழாயில் புதிதாக வால்வு பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த பணி நிறைவடையும் வரை ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட மாட்டாது என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.