குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தேங்கும் தண்ணீர்
குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தேங்கும் தண்ணீர்
அனுப்பர்பாளையம்
திருப்பூர் அவினாசி ரோட்டில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. இந்த நிலையில் அம்மாபாளையத்தில் பழைய போலீஸ் சோதனை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு தொடர்ந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறி, சாலையில் தேங்கி வருகிறது. இது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதுடன், வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அங்கு விபத்து ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது. இதேபோல் அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரை ஒருசிலர் எடுத்து அதே இடத்தில் நின்று குளிக்கின்றனர். இது பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது. நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால் அதிக அளவில் கொசு உற்பத்தியாகி, துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அம்மாபாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வதுடன், அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.