குமரலிங்கம் அருகே குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பு ஆண்டுக்கணக்கில் சீரமைக்கப்படாததால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
குமரலிங்கம் அருகே குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பு ஆண்டுக்கணக்கில் சீரமைக்கப்படாததால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
போடிப்பட்டி,
குமரலிங்கம் அருகே குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பு ஆண்டுக்கணக்கில் சீரமைக்கப்படாததால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
கூட்டுக்குடிநீர்த் திட்டம்
மடத்துக்குளம், குமரலிங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு திருமூர்த்தி கூட்டு குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.திருமூர்த்தி அணையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குழாய்கள் மூலம் கொண்டு வரப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.இந்த திட்டத்தில் அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்பும், அதனை சீரமைப்பதில் காட்டப்படும் அலட்சியமும் குடிநீர் விநியோகத்தில் குளறுபடிகளை ஏற்படுத்துகிறது.இதனால் பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர்த் தட்டுப்பாட்டால் அவதிப்படும் நிலை உள்ளது.இதுவே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை பொதுமக்கள் கையிலெடுப்பதற்கு காரணமாகவும் அமைகிறது.
குழாய் உடைப்பு
குமரலிங்கத்தையடுத்த பார்த்தசாரதிபுரம் பகுதியில் குடிநீர்க் குழாயில் ஏற்றப்பட்ட உடைப்பு ஆண்டுக்கணக்கில் சீரமைக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது'குமரலிங்கம் பகுதியிலிருந்து திருமூர்த்திமலை, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையில் குடிநீர்க் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.ஆண்டுக்கணக்கில் குடிநீர் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பதால் அந்த இடத்தில் சாலை சேதமடைந்து பள்ளமாக மாறியுள்ளது.இந்த பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.மேலும் குழாய் உடைப்பிலிருந்து வெளியேறும் குடிநீர் அருகிலுள்ள பஸ் நிறுத்தத்துக்கு அருகில் தேங்குகிறது.இதனால் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக, சாக்கடை போல மாறி துர்நாற்றம் வீசுகிறது.அத்துடன் பார்த்தீனியம் உள்ளிட்ட புதர்ச் செடிகள் முளைத்துள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது.மேலும் கொசு உற்பத்தியும் அதிக அளவில் உள்ளது.இதனால் பஸ் நிறுத்தத்தை பயன்படுத்த பொதுமக்கள் தயங்கும் நிலை உள்ளது.மேலும் பல்வேறு நோய்த் தொற்றுகளும் உருவாகும் அபாயம் உள்ளது.
மீட்டர் பொருத்தி அளவீடு
இதே வழித்தடத்தில் பல இடங்களில் குடிநீர்க் குழாய் உடைப்பு சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது.இதனால் பெருமளவு குடிநீர் வீணாவதால் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் பாதிப்படைகிறது.எனவே குடிநீர்க் குழாய் உடைப்புகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் அனைத்து கிராமங்களிலும் மீட்டர் பொருத்தி குடிநீர் விநியோகத்தின் அளவு கணக்கிடப்பட வேண்டும்.இதன்மூலம் திருமூர்த்தியிலிருந்து வெளியேறும் குடிநீர், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மற்றும் இடையில் வீணாகும் குடிநீர் ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட முடியும்.தினசரி லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணடிக்கப்படுவதே குடிநீர்த்தட்டுப்பாட்டுக்கு காரணமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்'என்று பொதுமக்கள் கூறினர்.