கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார்


கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார்
x
தினத்தந்தி 5 Sept 2023 1:00 AM IST (Updated: 5 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:-

ஊத்தங்கரை அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார். அடுத்தடுத்து இருவரும் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கணவன்- மனைவி

சேலம் மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த ஊமையனூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 60). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கோகிலா (45). இவர்களுக்கு கங்கா (20), கவுரி (18) ஆகிய மகள்கள் உள்ளனர்.

கடந்த மாதம் நடந்த விபத்தில் திருப்பதிக்கு 2 கால்களிலும் பலத்த அடிபட்டது. அதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். 8 நாட்களுக்கு முன்புதான் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் காலையில் திருப்பதி திடீரென இறந்தார். அவரது இறுதிசடங்கை உறவினர்கள் முன் நின்று நடத்தி முடித்தனர்.

உடல் அடக்கம்

கணவர் இறந்த பிறகு கோகிலா துக்கம் தாங்காமல் சோகத்தில் இருந்துள்ளார். நேற்று இரவு 10 மணி அளவில் கோகிலாவும் திடீரென இறந்தார். இதனால் அவருடைய மகள்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கோகிலாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

திருப்பதி- கோகிலா தம்பதியின் மகள் கங்காவுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டுதான் ஆகிறது. கவுரிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story