தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொன்ற மனைவி
திசையன்விளை அருகே தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார். தினமும் மது குடித்துவிட்டு வந்து தாக்கியதால் ஆத்திரத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த உவரி அருகே உள்ள குட்டம் பஞ்சாயத்து குஞ்சன்விளை பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 40), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயக்கொடி (35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சிங்காரவேலனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு ஜெயக்கொடியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து உதைத்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் சிங்காரவேலன் மதுபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, ஜெயக்கொடியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்கொடி கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அப்போது மதுபோதையில் இருந்த சிங்காரவேலன் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார். இதுதான் தக்கசமயம் என்று நினைத்த ஜெயக்கொடி ஒரு டம்ளரின் தண்ணீர் எடுத்து அதில் குருணை மருந்தை (விஷம்) கலந்து தனது கணவர் சிங்காரவேலனிடம் கொடுத்தாக கூறப்படுகிறது. அதை வாங்கி குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உடனடியாக உவரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வள்ளியூர் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார், உவரி இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சிங்காரவேலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காரவேலன் தாயார் மூக்கம்மாள் உவரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து ஜெயக்கொடியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட சிங்காரவேலன் கடந்த சில நாட்களுக்கு முன் திசையன்விளையில் டிஜிட்டல் பேனரை கிழித்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. திசையன்விளை அருகே தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்து கணவரை அவரது மனைவியே கொலை செய்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.