ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி குத்திக்கொலை
ஆசைக்கு இணங்க மறுத்ததால் மனைவியை குத்திக்கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட பெரியூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி தனம் (55). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். பெருமாள், தனம் ஆகியோர் பெரியூரில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பெருமாள் தன்னுடன் உறவுக்கு வருமாறு மனைவியை அடிக்கடி தொந்தரவு செய்து வந்து இருக்கிறார். இதனால் கடந்த மாதம் கணவரிடம் கோபித்து கொண்டு தனம் தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் பெருமாள் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தி தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.
குத்திக்கொலை
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பெருமாள் தனது மனைவியை ஆசைக்கு இணங்க தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. காமம் கண்ணை மறைத்ததால் ஆத்திரம் அடைந்த பெருமாள் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து தனத்தின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த தனம் மாடியில் உள்ள அறைக்கு ஓடினார். ஆனாலும் விடாமல் துரத்தி சென்ற பெருமாள் தனது லுங்கியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
பின்னர் அவர் தனது கையை தானே அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட வீட்டில் இருந்து வெளியேறி பெரியூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். உறவினரிடம் தன்னை தாக்கிவிட்டு மனைவியை சிலர் தூக்கி சென்றுவிட்டதாக கூறினார். ஆனால் அவருடைய பேச்சை நம்பாத உறவினர்கள் பெருமாளை கண்டித்து நடந்ததை கூறுமாறு கேட்டனர்.
அப்போது ஆசைக்கு இணங்க மறுத்ததால் மனைவியை கத்தியால் குத்தி கொன்று விட்டதாகவும், கொலையை மறைக்க தனது கையை தானே அறுத்து கொண்டு அவர் நாடகமாடியதும் தெரியவந்தது.
கைது
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி, கூடுதல் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியம் மற்றும் பாப்பாரப்பட்டி போலீசார் கொலையுண்ட தனத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெருமாளை கைது செய்த போலீசார் அவரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.