பிரம்மதேசம் பகுதிவயல்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்விவசாயிகள் கவலை
பிரம்மதேசம் பகுதியில் உள்ள தர்பூசணி வயல்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பிரம்மதேசம்,
தர்பூசணி சாகுபடி
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள சிறுவாடி, முருக்கேரி, நகர், தலைக்காணிகுப்பம், வங்காரம், காயல்மேடு, தேவநந்தல், நாணக்கால்மேடு, நடுகுப்பம், வண்டிப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்களில் தர்பூசணி சாகுபடி செய்து, பராமரித்து வருகிறார்கள்.
தற்போது தர்பூசணி பழங்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஒரு சில கிராமங்களில் விவசாயிகள், தர்பூசணிகளை அறுவடை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள் பரிதவிப்பு
இந்த நிலையில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்ட வயல்களுக்குள் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக புகுந்தன. பின்னர் அவை, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பழங்களை தின்று அட்டகாசம் செய்து வருகின்றன.
இதனால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்த தர்பூசணி பழங்களை பாதுகாக்க முடியாமல் பிரம்மதேசம் பகுதி விவசாயிகள் பரிதவித்து வருவதோடு, காட்டுப்பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி வருகிறார்கள்.
சுட்டுப்பிடிக்க நடவடிக்கை
இதுகுறித்து சிறுவாடியை சேர்ந்த விவசாயி பாலமுருகன் கூறுகையில், ஆண்டுதோறும் நாங்கள் தர்பூசணி பயிரை சாகுபடி செய்து பராமரித்து வருகிறோம். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள பழங்களை காட்டுப்பன்றிகள் தின்று சேதப்படுத்தி செல்வதால், என்னை போன்ற விவசாயிகள் செய்வதறியாமல் உள்ளோம். எனவே காட்டுப்பன்றிகள் அதிகம் உள்ள பகுதிகளில் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுபோல் பிரம்மதேசம் பகுதி விவசாயிகள் நலன்கருதி காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுட்டு ஒழிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
காட்டுப்பன்றி தாக்கி விவசாயி காயம்
நடுக்குப்பம் விவசாயி சங்கர் கூறுகையில், நான் தர்பூசணி சாகுபடி செய்துள்ளேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் எனது வயலுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகளை விரட்டினேன். அப்போது காட்டுப்பன்றி ஒன்று என்னை தாக்கியது. இதில் காயமடைந்த நான் ஆஸ்பத்திரியில் 2 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளேன். நாளுக்கு நாள் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்து வருவதால், காட்டுப்பன்றிகளை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்கவேண்டும் என்றார்.
இழப்பீடு வழங்கப்படும்
இதுகுறித்து திண்டிவனம் வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது:- காட்டுப் பன்றிகளால் விளை நிலங்களில் ஏற்படும் சேதத்திற்கு உரிய ஆவணங்கள் வழங்கினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை நிர்ணயிக்கும் இழப்பீடு தொகையை வனத்துறை சார்பில் இழப்பீடாக வழங்கப்படும். மேலும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்கோ அல்லது பிடிப்பதற்கோ? தற்போது வரை எந்தவித யுக்திகளும் இல்லை என்றார்.