வனத்துறையினரை துரத்திய காட்டுயானை
வனத்துறையினரை துரத்திய காட்டுயானை
பந்தலூர்
பந்தலூர் அருகே பாட்டவயல் போலீஸ் சோதனைச்சாவடி, தமிழக-கேரள எல்லையில் உள்ளது. இந்த பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளது. இதனால் தினமும் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாட்டவயல் சோதனைச்சாவடியை காட்டுயானை ஒன்று முற்றுகையிட்டது. தொடர்ந்து பொதுமக்களின் குடியிருப்புகளையும் முற்றுகையிட்டதால், அவர்கள் அச்சம் அடைந்தனர். மேலும் நேற்று காலையில் பாட்டவயல்-சுல்தான்பத்தேரி சாலையில் வாகனங்களை காட்டுயானை வழிமறித்தது. இதை அறிந்த பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ஜார்பிரவீன்ஷன், வனகாப்பாளர் மில்டன்பிரபு மற்றும் வேட்டை தடுப்புகாவலர்கள் விரைந்து வந்து காட்டுயானையை வனப்பகுதிக்கு விரட்டினர். அப்போது அவர்களை காட்டுயானை துரத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. எனினும் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு காட்டுயானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.