சமையலறை சுவரை உடைத்து சூறையாடிய காட்டு யானை


சமையலறை சுவரை உடைத்து சூறையாடிய காட்டு யானை
x

மசினகுடியில் காட்டு யானை பள்ளி சமையலறை சுவரை உடைத்து, உணவு பொருட்களை தின்று சூறையாடியது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

நீலகிரி

கூடலூர்,

மசினகுடியில் காட்டு யானை பள்ளி சமையலறை சுவரை உடைத்து, உணவு பொருட்களை தின்று சூறையாடியது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

சுவரை உடைத்த யானை

கூடலூர், மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகள் முதுமலை புலிகள் காப்பகத்தின் கரையோரம் உள்ளது. காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதன் காரணமாக மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்து வருகிறது.

இந்தநிலையில் மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் நேற்று முன்தினம் காட்டு யானை ஒன்று ஊருக்குள் வந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்துக்குள் நுழைந்தது. பின்னர் அங்கு இருந்த சமையலறை கட்டிட சுவரை காட்டு யானை உடைத்தது. பின்னர் உடைத்த பாகம் வழியாக யானை தனது தும்பிக்கையை அறைக்குள் நுழைத்தது. தொடர்ந்து அங்கு வைத்திருந்த உணவு பொருள்களை வெளியே எடுத்து தின்று சூறையாடியது.

வீடியோ வைரல்

இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவியது. இதனால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் மசினகுடி சுற்றுவட்டார கிராம மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர். தொடர்ந்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இதேபோல் கூடலூர் அருகே செளுக்காடி பகுதியில் காட்டு யானை ஒன்று தினமும் காலையில் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. சில சமயங்களில் சாலையில் நடந்தவாறு செல்கிறது.

இதனால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள் பீதியுடன் செல்லும் நிலை தொடர்கிறது. எனவே, காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story