வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ.4 லட்சம் நகை, பணம் திருட்டு
பேரணாம்பட்டில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.
பேரணாம்பட்டில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.
கணக்காளர்
பேரணாம்பட்டு டவுன் நியாமத் வீதியில் வசிப்பவர் முஹம்மத் அப்சன் (வயது 27). இவர் ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமத்திலுள்ள இரும்பு குடோனில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் முஹம்மத் அப்சனின் மனைவி ரூபினா தனது குழந்தைகளுடன் பேரணாம்பட்டு டவுன் நூர் அஹம்மத் வீதியிலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் மாலை 5 மணியளவில் முஹம்மத் அப்சன் வீட்டை பூட்டி விட்டு மனைவியின் தாயார் வீட்டிற்கு சென்றார்.
மறுநாள் காலை வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் கதவை திறக்க முடியாமல் போனதால் சந்தேகமடைந்த முஹம்மத் அப்சன் பக்கத்து வீட்டின் வழியாக சென்று பின்வாசல் வழியாக வீட்டிற்குள் சென்றார்.
ரூ.4 லட்சம் நகை, பணம் திருட்டு
அப்போது வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. மர்மநபர்கள் அருகே உள்ள காலியிடத்தின் வழியாக மாடிக்கு சென்று வீட்டின் உயரமான பகுதியில் உள்ள ஜன்னல் கம்பியை உடைத்து கயிற்றின் வழியாக கீழே இறங்கி அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதிலிருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள கம்மல், மோதிரம், வளையல்கள் மற்றும் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு வீட்டின் கதவை உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டு தப்பியது தெரிய வந்தது.
இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் முஹம்மத் அப்சன் அளித்த புகாரின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்த இடத்தை கைரேகை தடவியல் நிபுணர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இதுகுறித்து பலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.