ரெயிலுக்கு அடியில் குனிந்து செல்லும் அவலம்:சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பழுதடைந்த நடை மேம்பாலம் சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ரெயிலுக்கு அடியில் குனிந்து செல்லும் அவலம் நிலவுவதால் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பழுதடைந்த நடை மேம்பாலம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சேலம்,
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே பழைய சூரமங்கலம், சோளம்பள்ளம், அரியாகவுண்டம்பட்டி பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், அன்றாட வேலைக்கு செல்லும் நபர்களும் தினமும் ரெயில் தண்டவாளத்தை கடந்து சென்று வந்தனர்.
இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள், ரெயில்வே உயர்மட்ட நடைபாதை மேம்பாலம் அமைக்கக்கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில், ரெயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு ஜங்ஷன் ரெயில் நிலைய கூட்ஷெட் அருகே இரும்பு கம்பி மற்றும் கான்கிரீட் தளம் மூலம் ரெயில்வே உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது.
இந்த நடைமேம்பாலத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் பயன்படுத்தி வந்தனர். பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலத்தில் சைக்கிள் மற்றும் மொபட், மோட்டார் சைக்கிள் செல்ல முடியாது.
ஆபத்தான பயணம்
இந்த நிலையில், ரெயில்வே நடை மேம்பாலம் மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மாறியதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அடைக்கப்பட்டு விட்டது. மேலும் பல இடங்களில் கான்கிரீட் தளம் பெயர்ந்து விடும் நிலையில் உள்ளது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் பழைய சூரமங்கலத்தில் இருந்து சூரமங்கலம் வருவதற்கு வழி இல்லாமல் பரிதவித்து வருகிறார்கள். குறிப்பாக சொல்லபோனால் தண்டவாளத்தில் நிற்கும் ரெயிலுக்கு அடியில் ஆபத்தான நிலையில் தினமும் சென்று வரும் அவலநிலை இருந்து வருகிறது.
எனவே, உயிர்ப்பலி ஏற்படும் முன்பு பழுதடைந்த ரெயில்வே நடைமேம்பாலத்தை சீரமைத்து அதனை பயன்பாடடுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுப்பிக்க வேண்டும்
இதுகுறித்து பழைய சூரமங்கலத்தை சேர்ந்த மாதேஸ்வரன் கூறும் போது, 'நான் சிறுவனாக இருந்த போது இந்த நடைமேம்பாலம் வழியாகத்தான் பள்ளிக்கு சென்று வருவேன். பழைய சூரமங்கலம் பகுதியில் இருந்து ஜங்ஷன் ரெயில் நிலையத்தை கடந்து சூரமங்கலத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ரெயில்வே நடைமேம்பாலத்தில் செல்ல வேண்டும். அதன்பிறகு பொதுமக்களின் வசதிக்காக ரெயில்வே சுரங்கபாதை ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டும் என்றால் இந்த நடைமேம்பாலத்தை தான் பயன்படுத்த வேண்டும். எனவே பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படும் இந்த ரெயில்வே நடை மேம்பாலத்தை புதுப்பித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
ரெயில்வே போலீசார் அபராதம்
அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த ரமேஷ் கூறும் போது,'பழைய சூரமங்கலம், அரியாகவுண்டம்பட்டியில் இருந்து சூரமங்கலத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ரெயில் நிலையத்தை கடந்து செல்ல வேண்டி உள்ளது. ரெயில் நிலையத்தின் குறுக்கே 7 தண்டவாளங்கள் உள்ளன. பொதுமக்களின் தேவைக்காக அமைக்கப்பட்ட நடை மேம்பாலம் பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. ரெயில் நிலையத்திற்குள் சென்று உள்ளே அமைக்கப்பட்ட மேம்பாலத்தில் செல்ல முடியாது. அதில் பயணிகள் மட்டுமே செல்ல வேண்டும். சில நேரங்களில் பொதுமக்கள் சென்றால் அவர்களிடம் ரெயில்வே போலீசார் அபராதம் விதிக்கிறார்கள். பழைய சூரமங்கலம் மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட நடைமேம்பாலத்தை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்'என்றார்.