கலெக்டர் அலுவலகத்திற்கு தீக்குளிக்க வந்த பெண்
கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகத்திற்கு தீக்குளிக்க வந்த பெண், போலீஸ் சோதனையில் சிக்கினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 274 மனுக்கள் பெறப்பட்டது.
பின்னர் இந்த மனுக்கள், சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு நேர்முக உதவியாளர் சுரேஷ் உத்தரவிட்டார். கூட்டத்தில் கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதாபேகம், உதவி ஆணையர்(கலால்) ராஜவேல் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தீக்குளிக்க வந்த பெண்
இந்த கூட்டத்திற்கு வந்த அனைவரையும் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். அந்த வகையில் மூதாட்டி ஒருவரின் பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் கேனில் 2 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர், சங்கராபுரம் வள்ளலார் கோவில் தெருவை சேர்ந்த புஷ்பா(வயது 60) என்பதும், 30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் அவரது வீட்டிற்கு 2008-ம் ஆண்டில் அரசு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாகவும், அதனை வேறு ஒருவர் போலி ஆவணம் தயாரித்து பட்டா பெற்ற்றதாகவும், இது பற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் எச்சரிக்கை செய்து, அதிகாரிகளிடம் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல அனுமதித்தனர்.