விழுப்புரத்தில்கீழே கிடந்த நகையை போலீஸ் சூப்பிரண்டிடம் ஒப்படைத்த பெண் காவலர்
விழுப்புரத்தில் கீழே கிடந்த நகையை போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் காவலர் ஒப்படைத்தாா்.
காவல்துறையில் பெண்களின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு வடக்கு மண்டல பெண் போலீசாருக்கு சென்னை ஒத்திவாக்கத்தில் நேற்று துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் கலந்துகொண்ட 10 பெண் போலீசார்களில் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் அமலா டெல்பின் சுதா 3-ம் பரிசு பெற்று வெண்கல பதக்கம் வென்றார். பின்னர் அவர் சென்னையில் இருந்து விழுப்புரம் திரும்பினார். அப்போது விழுப்புரம் புதிய பஸ் நிலையம் சுதாகர் நகர் தெருமுனையின் அருகே அவர் பஸ்சில் இருந்து இறங்கி நடந்து செல்லும்போது அங்கு 2 பவுன் எடை கொண்ட தங்கச்சங்கிலி கீழே கிடந்ததை பார்த்த அவர், அந்த தங்கச்சங்கிலியை எடுத்து, அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் ஒப்படைத்தார். அவரது நேர்மையை பாராட்டியும், துப்பாக்கி சுடும் போட்டியில் கோப்பை வென்றதற்கும் அமலா டெல்பின் சுதாவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வெகுவாக பாராட்டினார். மேலும், இந்த தங்கச்சங்கிலியை தவறவிட்ட அதன் உரிமையாளரிடம் அதன் அடையாளம் மற்றும் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.