கிணற்றில் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது
கந்திலி அருகே கிணற்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது. இதுகுறித்து அவருடைய காதலன் மற்றும் கல்லூரியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்திலி அருகே கிணற்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது. இதுகுறித்து அவருடைய காதலன் மற்றும் கல்லூரியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரிந்தது
திருப்பத்தூர் அருகே உள்ள எலவம்பட்டி ஊராட்சி செல்லரப்பட்டி கிராமத்தில் கடந்தசில நாட்களுக்கு முன்பு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கந்திலி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பிணமாக கிடந்த பெண் அதேப்பகுதியை சேர்ந்த சந்தோஷ் பிரியா என்பது தெரியவந்தது.
இதுபற்றிய விவரம்வருமாறு:-
கிணற்றில் பிணம்
திருப்பத்தூர் அருகே உள்ள எலவம்பட்டி ஊராட்சி செல்லரப்பட்டி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகள் சந்தோஷ் பிரியா (வயது22). பட்டதாரியான இவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் குரூப் தேர்வுக்கு படித்து வந்தார். இவரது தந்தை இறந்துவிட்டார். தாயார் பெங்களூரில் வசித்து வருகிறார். இதனால் சந்தோஷ் பிரியா செல்லரப்பட்டி கிராமத்தில் அவரது தாத்தாவுடன் வசித்து வந்தார். மேலும் அதேப் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் சந்தோஷ் பிரியா மாயமானார். அவர் காதலனுடன் சென்று இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் நினைத்திருந்தனர். இதனால் அவரை தேடவில்லை. போலீசிலும் புகார் அளிக்கவில்லை. இந்த நிலையில் செல்லரபட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் என்பவருக்கு சொந்தமான விவசாயகிணற்றில் சந்தோஷ்பிரியா பிணமாக கிடந்தார். அவரது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடலும், தலையும் வெவ்வேறாக அழுகிய நிலையில் கிடந்தது.
காதலனிடம் விசாரணை
இது பற்றி தகவல் அறிந்ததும் கந்திலி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் துண்டிக்கப்பட்ட தலையுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சந்தோஷ் பிரியாயவை கொலை செய்து கிணற்றில் வீசி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது காதலனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சந்தோஷ் பிரியாவை அவரது காதலன் அழைத்துச் செல்லவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் திருப்பத்தூரில் சந்தோஷ் பிரியா படித்து வந்த கல்வி நிறுவனத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தோஷ் பிரியாவின் செல்போன் மூலமும் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் இந்த வழக்கில் முக்கிய தடையங்கள் கிடைக்கும், அதன் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.